இதோ தண்ணீர் வந்துவிட்டது!

இதோ தண்ணீர் வந்துவிட்டது!

இதோ தண்ணீர் வந்துவிட்டது!

இதோ தண்ணீர் வந்துவிட்டது!

இதோ தண்ணீர் வந்துவிட்டது!

இதோ தண்ணீர் வந்துவிட்டது!

சமீபத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது நெருங்கிய நண்பன் ஒருவனை நாமக்கல் பஸ் நிலையம் அருகே சந்தித்தேன். வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக மாலை ஏழு மணி ஆகியும் நல்ல வெளிச்சம் இருந்தது.  நீண்ட காலத்துக்குப் பிறகு நடக்கும் முதல் சந்திப்பு என்பதால் சற்று நிதானமாக பேசிக் கொண்டே நடந்தோம்.

நான்கு வருடங்களாக சென்னையில் உள்ள ‘தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்லூரி’’ ஒன்றில் ஒரே வகுப்பில் தான் பொறியியல் பயின்றோம். (இப்போது கூட பீற்றிக்கொள்ளாவிட்டால் அப்புறம் அந்த ‘தலைச்சிறந்த கல்லூரியில்’ படித்ததற்கு வேறு என்ன தான் பயன்!). படிப்பு முடிந்து ஆறு மாதங்களாக வெவ்வேறு இடங்களில் வேறு வேறு வேலைகளில் இருந்திருந்தும் நேற்றைக்குத் தான் பார்த்தது போல பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.

“நல்லா குண்டாகிட்ட போல?!” என்றேன் நான். நான்கு வருடங்களாக ‘ஒல்லிகுச்சி’, ‘ஒமகுச்சி’ என்று கலாய்க்கப் பட்டவன் இப்போது ஆறு மாதத்தில் நன்கு ‘ஊதிவிட்ட பலூன்’ போல பருமனாகி இருந்தான்.

நான் கேட்டக் கேள்வியை காதில் வாங்கிக்கொள்ளாமல் “எங்க சாப்பிடலாம்?” என்று எதிர்க் கேள்வி கேட்டான்.

“எப்போவும் போல ‘கருப்பன் கடைல’ தான்”

“இன்னைக்கு ஒரு புடி புடிச்சிட வேண்டியது தான்” என்றான். எனக்கு இதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது என்னவோ உண்மை தான்.

நாமக்கல் நகரிலேயே மிகவும் பிரஸித்தி பெற்ற ஒரு உணவகம் அது. அளவில் எங்கள் விடுதி அறையை விடச் சிறியதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருந்த ஒரு பழைய காலத்துக் கடை. அசைவத்தில் அனைத்து ரகங்களும் அங்கே கிடைக்கும். முக்கியமாக காடை மற்றும் புறா ‘சப்பை’க்கும் பரோட்டாவுக்கும் கிராக்கி அதிகம். அங்கே சாப்பிடவேண்டுமானால் கடை திறப்பதற்குள் வரிசையில் சென்று நின்றாக வேண்டும்.

பொதுவாக பேருந்து நிலையத்தில் இருந்து கருப்பன் கடைக்கு நடந்தே சென்று விடலாம். சேலம் செல்லும் சாலையில் சென்றால் குறுக்கு வழி ஒன்று உள்ளதென்றுக் கணக்கிட்டு அந்த சாலையின் ஒரு ஓரமாக நடந்துக் கொண்டிருந்தோம். வெள்ளிக்கிழமை என்பதால் சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பேருந்து கிறீச்சிட்டபடி நின்றது. நிறைய பேர் பேருந்துக்கு முன்னால் ஓடினர். சற்று நேரத்தில் ஒரு கூட்டமே பேருந்து முன்னால் கூடி விட்டது. பல வாகனங்கள் சாலையில் நின்று என்ன நடக்கிறதென்று தெரியாமல் ‘பாம் பாம்’ என்று சங்கை முழங்கின. என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்கு நாங்களும் அந்த கூட்டத்தினுள் எட்டிப் பார்த்தோம். ஒரு வயதான பெரியவர் விழுந்து கிடந்தார். அவரைச் சுற்றி நிறைய பேர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். சிலர் பேருந்து ஓட்டுனரைப் பிடித்து வசை பாடிக்கொண்டிருந்தனர். சிலர் தாங்கள் கண்ட காட்சியை மற்றவர்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் யாரும் அந்த முதியவரை நெருங்கவில்லை.

எதற்காக சாலை ஸ்தம்பித்து நிற்கின்றதென்று அறிவதற்கு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூட்டத்திற்குள் பிரவேசித்தார். அதற்குள் யாரோ சிலர் அந்த முதியவர் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். தண்ணீர் முகத்தில் பட்டவுடன் சடாரென்று எழுந்து உட்கார்ந்தார் அந்த முதியவர். அவரிடம் ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் விழித்துக்கொண்டிருந்தார் அந்த பெரியவர்.

“ஃபுல் போதைல வந்து விழ இந்த வண்டி தான் கிடைச்சுதா?” என்று கொதித்தார் என் அருகில் இருந்த ஒருவர். அவர் தான் பேருந்து நடத்துனர் போலும்.

“அதான் ஒன்னும் ஆகலல! கிளம்பு கிளம்பு! எடத்தக் காலி பண்ணு” போக்குவரத்துக் காவலர் கூட்டத்தைக் கலைக்க முற்பட்டார். உடனே நானும் என் நண்பனும் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினோம்.

அங்கிருந்து கருப்பன் கடைக்கு வரும் வரை இருவரும் பேசாமல் வந்தோம். கடைக்கு முன்பு சிலர் வரிசையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சாப்பிடுவதற்குத் தான் இவர்கள் காத்துக்கொண்டிருந்தனர் என்று கண்டுபிடிக்க ரொம்ப நேரம் பிடிக்கவில்லை. நாங்களும் அந்த வரிசையில் கடைசியாகச் சேர்ந்துகொண்டோம். சில நிமிடங்களுக்கு இருவரும் வாய் திறக்கவில்லை.

“மாப்ள! ஒரு பெக் அடிப்போமா?”, கொஞ்ச நேரத்திற்குப் பிறகு என் நண்பன் கேட்டான்.

“எங்கம்மா என்னய கொன்னுடும்!”, என்று சிரித்தேன் நான். அவனும் சிரித்தான்.

“தம்பி! கடைய எப்போ தொறப்பாங்களாம்?”, எங்களுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

யாரென்று திரும்பி பார்த்தேன். பேருந்துக்கு முன்னால் விழுந்து கிடந்த அதே பெரியவர் தான். நன்கு குடிபோதையில் தள்ளாடியபடி நின்றார். இந்தக் குடிபோதையினால் தான் பேருந்து முன் விழுந்தார் போலும்.

“இன்னும் அரைமணி நேரம் ஆவுமாம்”, என்றான் நண்பன்.

“அரைமணி நேரமா?! என்னா வக்காளோலி கடைய நடத்துறானுங்க! கருமம் பிடிச்சவனுங்க!” என்றார் அந்த பெரியவர்.

நானும் என் நண்பனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

“நீங்க எங்க தம்பி படிக்கிறீங்க?” என்று எங்களை பார்த்து கேட்டார்.

‘படிப்பு முடிந்து வேலை பார்க்கிறோம்’ என்று சொல்ல நினைத்து பின் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். “சென்னைல’ங்ண்ணா” என்றேன்.

“ஹூம். சென்னைல தான் இன்னைக்கு கிரிக்கெட் மேட்ச் நடக்குலையாமே?”

“நடக்குதேண்ணா; நாளைக்கு தானே மேட்ச்” என்றான் என் நண்பன்.

“நீங்க போய் பாக்குறீங்களா?”

“இல்லண்ணா; நாமளாம் டீவில தானே பாப்போம்”

“டீவிலக் கூட பார்க்கக் கூடாது தம்பி! நாம பாக்குறனாலத் தான் அவனுங்க காசு சம்பாதிக்கிறானுங்க!”

“நாம பாக்கலைனாலும் அவனுங்க காசு சம்பாதிப்பாங்கண்ணா”, என்றான் என் நண்பன்.

“அதெல்லாம் முடியாது தம்பி. என்னய கேட்டா சென்னைல மேட்ச் நடக்கவே விட கூடாது. நம்மளோட பலத்த காமிச்சாத் தானே பயந்துப் போய் சென்ட்ரல் கவுர்மென்ட்டு தண்ணியத் தொறந்துவிடுவானுங்க.”

“தண்ணிக்கும் கிரிக்கெட்டுக்கும் என்னண்ணே சம்மந்தம்?”

“சம்மந்தம் இருக்குப்பா. சம்மந்தம் இருக்கு! நாமளாம் ஒத்துமையா இருந்துப் போராடுனா தான் அவனுங்கப பயப்படுவானுங்க. படிச்ச உங்களுக்கே இது தெரியலன்னா எப்படி தம்பி? இந்தக் காலத்து யூத்துகிட்ட அவ்ளோ ஒத்துமை இல்ல. இங்க விவசாயி இவ்ளோ கஷ்டப்படுறான், இதுல கிரிக்கெட் கேக்குதா இவனுங்களுக்கு! நமக்குத் தண்ணீர் கிடைக்குற வரைக்கும் இங்க கிரிக்கெட் நடக்க விடக்கூடாது”, என்று பொருமினார் அந்த பெரியவர்.

அதற்குள், “பார்சல் வாங்குறவங்க மட்டும் உள்ள வாங்க” என்று யாரோ கூவ, சிலர் முண்டியடித்துக்கொண்டு உள்ளே சென்றனர். அந்தக் களேபரத்தில் இந்தப் பெரியவரும் மாயமானார்.

*****

மறுநாள் மாலை ஏழு மணிச்செய்திகள் பார்ப்பதற்கு வீட்டு வரவேற்பறையிலுள்ளத்  தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்திருந்தேன். அம்மா அப்போது தான் உள்ளே வந்தாள். அன்றையக் காட்டுவேலைகளை முடித்துவிட்டு மிகவும் களைத்துப்போயிருந்தாள்.

தலைமுறைத் தலைமுறையாக விவசாயம் செய்யும் குடும்பம் எங்களுடையது. சின்னதொரு ஓட்டு வீடும் அதனைச்சுற்றி மூன்று ஏக்கர் நிலமும் எங்கள் பரம்பரைச் சொத்து. அந்த நிலத்தில் கம்பும் கரும்பும் சோளமும் மழைக்காலத்தில் நெல் பயிறும் விளைவிப்பது வழக்கம். சமீபகாலமாக மழைப் பொய்த்துவிட்டதாலும் காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததாலும் வெறும் சோளம் மட்டுமே விளைச்சல். விளைச்சல் குறைந்தபோதிலும் காட்டுவேலைகள் குறைந்தபாடில்லை. தினமும் மாலை ஆறரை மணி வரை காட்டில் இருந்துவிட்டு தான் வீட்டிற்க்கு வருவாள் அம்மா.

“வணக்கம். இன்றைய முக்கியச்செய்திகள்: சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் மீது பல்வேறு அமைப்பினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல். ‘காவிரி கிடைக்கும் வரை கிரிக்கெட் நடக்க விடமாட்டோம்’ என கோஷம்….”, என்று செய்தி வாசிக்க ஆரம்பித்தார் ஒரு பெண்மணி.

“எதுக்காக அந்தப் பையன அப்படி அடிக்குறானுங்க?”, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு காட்சியில் மஞ்சள் நிறச் சட்டை அணிந்திருந்த ஒருவனை நான்கைந்து பேர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து இப்படிக் கேட்டாள் அம்மா.

“காவிரிக்காக போராடுறாங்களாம்!”

“இப்படி இவன அடிச்சா காவிரில தண்ணீர் வந்துடுமா?”

“கிரிக்கெட் நடக்கவிடாம போராடுனா தண்ணீர் கிடைச்சுடுமாம்”

“சுத்தக் கிறுக்கனுங்களா இருக்கானுங்க! இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? சரி! அப்படியே இந்த வருஷம் ஆத்துல தண்ணீர் வந்துச்சுனா விவசாயி படற கஷ்டம்லாம் தீர்ந்துடுமா”

அம்மாவின் கேள்விக்கு பதில் இல்லாமல் மௌனமானேன். “மேலும் உயர்கிறது பெட்ரோல் டீசல் விலை; லிட்டருக்கு….”  என்று தொடர்ந்தார் செய்திவாசிக்கும் பெண்மணி.

“தண்ணீர் கிடைச்சா மட்டும் பத்தாது!”, அம்மா தொடர்ந்தாள், “குறைந்தபட்ச விலைய கவுர்மென்ட்டு நிர்ணயிச்சுச் சந்தைல விலை குறையும்போது ஒழுங்கா குடுக்கணும்; இந்த மாதிரி பஞ்ச காலத்திலயும் வெள்ளம் வரும்போதும் ஒழுங்கா நஷ்ட ஈடு குடுக்கணும். ஒரு விவசாயி கடன் வாங்கிப் பயிறு நட்டு விளைச்சல் வராமப் போச்சுனா கடன திருப்பிக் கொடுக்க அடுத்த விளைச்சல் வரை கொஞ்சம் டைம் குடுக்கணும். இதெல்லாம் எவனுக்கும் தெரியாது. எவனும் கண்டுக்க மாட்டான். விவசாயி தற்கொலை பண்ணிக்கும்போது ஒரு நாதியும் கேக்காது! காவிரிக்கு மட்டும் முன்னாடி  வந்துருவானுங்க, அரசியல் பண்றதுக்கு. நாலு நாள் போராட்டம் பண்ணிட்டு மறந்துடுவானுங்க. இங்க பெய்யுற மழையச் சேமிச்சாவே போதுமே, எதுக்குப் பக்கத்து மாநிலத்துக்கிட்ட போய் பிச்சைக் கேக்கணும்?”

அம்மா கேட்கும் எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதிலில்லை.“பிரபல நடிகர் நடித்து அடுத்தவாரம் வெளியாக இருக்கும் திரைப்படத்திற்குப் புதியதொருச் சிக்கல் வந்துள்ளது….”, தொடர்ந்தார் அந்த பெண்மணி.

*****

இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன். அதே பெண்மணி ‘காவிரிப் பிரச்சனையால் சென்னையில் நடைபெற இருந்த அனைத்துப் போட்டிகளும் புனேவிற்கு மாற்றப்பட்டுவிட்டன’, என்று தெரிவித்தார்.

“இப்போ வந்துடுமா தண்ணீர்?”, எனக்கு நானே வினவிக்கொண்டேன்.

உடனே அம்மா வாசலில் இருந்து கத்தினாள்.

“டேய்… இதோ ஆத்துத் தண்ணீர் வந்துடுச்சு. போய் ரெண்டு குடம் கொண்டு வா. போ!”

சிரிப்பு தான் வந்தது

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

Let's connect?