கடன்

கடன்

கடன்

கடன்

கடன்

கடன்

பழைய ‘மிரிண்டா’ இரண்டு லிட்டர் பாட்டிலில் மிச்சம் இருந்த தண்ணீர் முழுவதையும் காலி பண்ணியும் இன்னும் தாகம் எடுத்தது. பொல்லாத தாகம்! எவ்வளவு குடித்தாலும் வயிறு நிரம்புகிறதே ஒழிய தாகம் அடங்கினபாடில்லை. நிமிர்ந்துப் பார்த்தான். காலை எட்டு மணி சேலம் பஸ் அப்போது தான் ஹாரன் அடித்துக்கொண்டே போனது. இங்கிருந்து பார்த்தாலே மெயின் ரோட்டில் என்ன போகிறதென்றுத் தெரியும். காட்டில் இருக்கும் போதெல்லாம் ரோட்டில் போகிற பஸ் ஹாரன் தான் கடிகாரம்.

எட்டு மணி தான் என்றாலும் வெயில் பந்தி பரப்பியிருந்தது. சித்திரை ஆரம்பிப்பதற்குள்ளாகவே இப்படி என்றால் இன்னும் வெயில் காலம் வந்தால் எப்படி இருக்குமோ! இந்த வருடமும் மழை பொய்த்து விட்டால்? நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தது.

ஒரு சுமை சோளப்பயிர் அறுத்து முடித்திருந்தான். இன்றைக்கு இது போதும் மாடுகளுக்கு. வேண்டுமென்றால் சாயுங்காலம் வந்து அறுத்துக் கொள்ளலாம். அறுத்து வைத்திருக்கும் சோளப்பயிர் எல்லாவற்றையும் தேங்காய் நார் கயிற்றை வைத்து ஒரே கட்டாகக் கட்டினான். காலை ஆறரை மணியில் இருந்து மெனக்கெட்டாலும் ஒரு சுமை தான் அறுக்க முடிந்திருந்தது. தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு மீண்டும் தலைப்பாகையாகக் கட்டினான். ஒரே மூச்சாக சோளப்பயிர்க்கட்டைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக  இரண்டு ஏக்கர் நிலமும் ஈசான்ய மூலையில் ஒரு சின்ன ஓட்டு வீடும் இவர்களுடையது. அப்பா பல வருடங்களாக லாரி ஓட்டுநராகப் பாடுபட்டுச் சம்பாதித்தது. நிலம் வாங்கிய போது இவர்களுடைய நிலத்தில் எவ்விதப் பாசன வசதியும் இல்லை. ‘மானாவாரி விவசாயம்’ தான் செய்து வந்தார்கள் (பாசன வசதி எதுவும் இல்லாமல் மழையை நம்பிச் செய்யும் விவசாயத்தை மானாவாரி என்பார்கள்). பிறகு இவன் பதினைந்து வயது இருக்கும் போது ஒரு லாரி விபத்தில் அப்பா இறந்துவிட முழு குடும்ப பாரமும் இவன் தலையில் விழுந்தது. அன்றிலிருந்து படிப்பை விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். சில நாட்கள் கேணித்துறைக்குக் கிணறு வெட்டும் வேலைக்குச் செல்வான். சில நாட்கள் வயலில் பார் இழுக்கும் வேலைக்குச் செல்வான். வயலில் உரம் அடிப்பது, பூச்சி மருந்து அடிப்பது, நெல் அல்லது சோளப்பயிர் அறுவடை செய்வது என்று எங்கெல்லாம் வேலை இருக்கிறதென்று கூப்பிடுகிறார்களோ அங்கே எல்லாம் செல்வான். மண்வெட்டியைத் தோளில் செருகிக்கொண்டு தலையில் கட்டிய துண்டோடு காலை ஆறு மணிக்குப் புறப்பட்டான் என்றால் திரும்ப வீடு வந்து சேர இரவு ஏழு மணி ஆகிவிடும். சில நாட்கள் அம்மா தூக்குப்போணியில் கட்டுச்சோறு செய்துக் கொடுப்பாள். சில நாட்கள் இவன் வேலை செய்யும் வீட்டிலேயே சோறு போடுவார்கள். அன்றைக்கெல்லாம் மண்வெட்டியுடன் ஒரு சாப்பாட்டுத் தட்டும் கொண்டுச் செல்வான்.

இப்படி கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்தக் காசையும் செட்டியாரிடம் இருந்து இரண்டு ரூபாய் வட்டிக்கு (வட்டார வழக்கில் ஒரு ரூபாய் வட்டி என்றால் 12% வட்டிக்குச் சமம்) கடன் வாங்கிய காசையும் வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு போர் போட்டு பம்பு செட் அமைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அப்போதிலிருந்து தினமும் கூலி வேலைக்குச் செல்லும் அவசியமில்லை. காட்டு வேலையே தலைக்கு மேலிருந்தது. அந்தக் கடனை அடைக்க நான்கு வருடங்கள் பாடுபட்டது வேறு விசயம்.

வீட்டுக்கு வந்த போது மாடுகளும் கன்றும் நிழலில் கட்டப்பட்டிருந்தன. அம்மா மாடுகளுக்கு தீவனமும் தண்ணீரும் காட்டிவிட்டாள் போலிருக்கிறது. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாள். உடம்பு முடியாமல் இருக்கும் பொழுது பேசாமல் ஓய்வு எடுப்பதை விட்டுவிட்டு எதற்குத் தான் கஷ்டப்பட வேண்டுமோ? கேட்டால் ‘மாடுங்க பாவம் டா. வாயில்லா ஜீவன்லாம் வெயில்ல கஷ்டப்படும்ல’ என்பாள். மாடு என்றால் அம்மாவுக்கு ரொம்ப பிரியம். ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பெயர் உண்டு. ‘கருப்பி தண்ணி குடிச்சாளா?’, ‘சுந்தரி ஏன் கத்துறா?’ என்று அக்கறையோடு தான் கேட்பாள்.

மாடுகளுக்குத் தீனி போட்டுவிட்டு வீட்டுக்குள் செல்லும் போது அம்மா கட்டிலில் படுத்திருந்தாள்.

“என்ன குழம்பும்மா இன்னைக்கு?” என்றான்.

“நேத்து வெச்ச குழம்பு மிச்சம் இருக்குது. மத்தியானம் வேற குழம்பு வெச்சுக்கலாம்னு விட்டுடேன்.”

“நீ சாப்பிட்டியா?”

“ஹூம்”

சட்டியில் இருக்கும் சோற்றை தட்டில் போட்டு அம்மாவின் கட்டிலின் அருகே போய் அம்ர்ந்தான்.

“இப்போ வலி எப்படி இருக்குது?”

“அப்படியே தான் இருக்குது.” என்றாள்.

ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு அம்மாவிற்கு அடிக்கடி நெஞ்சு வலி வரவே டவுன் ஆஸ்பத்திரியில் போய் பார்த்தார்கள். இதயத்திற்குச் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதென்றும், ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எல்லாம் சரியாகப் போய்விடுமென்றும் சொன்னார்கள். ஒன்றரை லட்சம் கடன் வாங்கிச் செலவு செய்தது தான் மிச்சம். அறுவை சிகிச்சை முடிந்து வீடுக்கு வந்த ஒரு மாதத்தில் மீண்டும் நெஞ்சு வலி வரவே இன்னொரு அறுவை சிகிச்சை செய்தால் தான் குணமாகுமென்றும் அதற்கு இரண்டிலிருந்து மூன்று லட்சம் செலவாகுமென்றும் மருத்துவர்கள் அறிவித்தார்கள்.

இன்னொரு ஆபரேஷன் என்றதும் அம்மா வேண்டவே வேண்டாமென்று சொல்லிவிட்டாள்.

‘லட்சம் லட்சமா செலவு செஞ்சு அப்படி என்ன பெருசா வாழ்ந்துட போறேன்? எல்லாம் போற வயசுதானே!’ என்று புலம்புவாள்.

அவ்வப்போது ‘போறதுக்குள்ள உனக்கொரு கலியாணம் பண்ணிப் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அது நடக்காம போய்டும் போலிருக்கே’ என்று அழுவாள். அப்போதெல்லாம் இவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது. ஆனால் எப்படியாவது அம்மாவை குணப்படுத்தியாக வேண்டுமென்று ஒரு வைராக்கியம் இவனுக்குண்டு. கடந்த சில நாட்களாக அம்மாவிற்குத் தெரியாமல் ஊரில் தெரிந்தவரிடம் எல்லாம் கடன் கேட்டு வந்தான். ஆனால் கடனுக்கு இணையாக அடகு வைப்பதற்கு இவனிடம் எதுவும் இல்லாததால் யாரும் கடன் கொடுக்க முன் வரவில்லை. இருக்கின்ற ஒரே சொத்தான இரண்டு ஏக்கர் நிலமும் ஐந்து மாதங்களுக்கு முன் ‘ஸொசைட்டி பேங்க்’ எனப்படும் கூட்டுறவு வங்கியில் வாங்கிய ஓன்றரை லட்சம் கடனுக்கு அடகு வைக்கப்பட்டிருந்தது.

“ஸொசைட்டியில இருந்து வந்திருந்தாங்க” என்று அம்மா சொன்னதைக் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தான்.

“என்னவாம்?”

“வேற என்ன. வாங்குன கடனுக்கு வட்டி கேட்கத்தான்.”

“இந்த மாசம் கொஞ்சம் டைட்டு. மழையும் பொய்த்துடுச்சு. போர்லயும் தண்ணி நின்னுடுச்சு. எப்படி விவசாயம் பண்ண? எப்படி கடனக் கட்ட?”

அம்மா பதிலேதும் பேசாமல் அமைதியானாள்.

“பொல்லாதக் கடன்காரனுங்க. இல்லாதவங்ககிட்ட வந்துதான் காசுப் புடுங்கப் பாப்பானுங்க.” என்று பொருமினான்.

அம்மா பாவம். எவ்வளவு கஷ்டம் தான் அவளுக்கு. இதில் இந்த இதய நோய் வேறு. காலையில் விடிந்தும் விடியாததுமாய் வந்து விட்டார்கள் போலும் கடனைத் திருப்பிக் கேட்க. கடன்காரர்கள் என்றாலே இப்படித் தானே.  என்ன செய்வதென்று புரியவில்லை இவனுக்கு. ஸொசைட்டியில் வாங்கிய கடனையும் திருப்பித் தர வேண்டும். அம்மாவின் சிகிச்சைக்கும் காசு புரட்ட வேண்டும். அவ்வளவு காசுக்கு எங்கே செல்வதென்று தெரியவில்லை. பெருமூச்சு தான் வந்தது.

*****

ஐந்து மாதத்திற்கு முன் நடந்தது இன்னும் இவனுக்கு அச்சு அடித்ததைப் போல நினைவில் இருந்தது.

அவன் கடன் கேட்க அந்த ஸொசைட்டியை சென்றடைந்திருந்த சமயம் வானத்தில் மேகங்கள் இருட்டிக்கொண்டு வந்தன. இந்த வருடமாவது நன்கு மழை பெய்யும் என்று நம்பியிருந்தான். ஸொசைட்டி அலுவலகக் கட்டிடம் முப்பது வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட ஒரு பழமையான இரண்டு மாடிக் கட்டிடம். கீழே மேனேஜர் சாரின் உரக்கடையும் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவுச் சங்கமும் இருந்தன. பேங்கிற்குச் செல்ல படியேறித் தான் மேல் மாடிக்குச் செல்ல வேண்டும்.

அவன் அந்தப் படியிலேயே நின்று கொண்டிருந்தான். அவன் செய்வது சரியா என்று அவனுக்கே குழப்பமாக இருந்தது. வெறும் ஒன்றரை லட்சத்திற்குப் போய் பத்து லட்சம் தேறும் நிலத்தை அடகு வைக்கலாமா? பேசாமல் செட்டியாரிடம் போய் காசு கேட்டுப் பார்க்கலாம். ஆனால் அவன்  ஸொசைட்டியில் கடன் வாங்கத் தீர்மானித்ததற்கும் ஒரு காரணமுண்டு.

அது தேர்தல் சமயம். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த கட்சி தான் ஆட்சிக்கு வருமென்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. டீக்கடை, மளிகைக்கடை என்று எங்கு பார்த்தாலும் மக்கள் இப்படித் தான் பேசிக்கொண்டார்கள். இவனும் அப்படித் தான் நம்பினான். அந்த எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் இருந்து விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்கள். அது மட்டுமில்லாமல் ஸொசைட்டியில் முப்பது பைசாவில் விவசாயத்திற்குக் கடன் கொடுத்தார்கள். ஆனால் அதற்கு விவசாய நிலப் பத்திரத்தை இணையாக வைக்க வேண்டும்.

அவன் ஸொசைட்டி அலுவலகத்திற்குள் நுழையும் போது அவனைப் பார்த்து மேனேஜர் சார் சைகை செய்தார்.

“வாடா பரமா. எப்படி இருக்க? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு!” என்றார்.

அந்த அலுவலகத்தில் மேனேஜர் சாரைத் தவிர இன்னும் மூன்று பேர் வேலை செய்தனர். மேனேஜரை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவரும் அந்த ஊர் தான். படித்தவர் போலும். ஸொசைட்டி வேலையைத் தவிர அதே கட்டிடத்தில் உரக்கடையும் வைத்திருந்தார். உரம் வாங்குவது என்றால் அவர் கடையில் தான் சென்று வாங்குவான். அதுமட்டுமில்லாமல் பல தடவை அவருடைய காட்டில் சென்று வேலையும் செய்திருக்கிறான்.

“நல்லா இருக்கேன் சார்”

“என்னடா இப்போல்லாம் உரக்கடைப் பக்கமே ஆளக் காணோம்?”

“எங்க சார். மழை இல்லாதததுனால காட்டுல ஒழுங்கா வெள்ளாமையே இல்ல.”

“அதுவும் சரி தான். வீட்ல அம்மா சவுக்கியமா? என்ன இந்தப் பக்கம்?”

எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல் விழித்தான். அவரே புரிந்து கொண்டவராய்க் கேட்டார்.

“கடன் கிடன் ஏதாவது வேணுமா?”

“ஆமாங்க சார்” கீழே தரையைப் பார்த்தவாறு கூறினான்.

மேசைக்கு முன் இருக்கும் நாற்காலியில் உட்காரச் சொன்னார்.

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல சார். இதயத்துல ஆபரேஷன் பண்ணணும். அவசரமா காசு தேவைப்படுது.”

“அடடா! என்ன ஆச்சு உங்க அம்மாக்கு?”

முழுவதையும் அவரிடம் விலாவாரியாக விளக்கினான். நீண்ட நேர அமைதிக்குப் பிறகு அவர் பேசலானார்.

“ஆனா இங்க விவசாயக் கடன் மட்டும் தானே குடுப்போம்”

“சார், நீங்க மனசு வெச்சா நடக்கும் சார். நிலப் பத்திரம்லாம் எடுத்துட்டு வந்திருக்கிறேன். விவசாயக் கடனா போட்டுக்குடுத்திங்கன்னா புண்ணியமாப் போகும். தலைவர் ஆட்சிக்கு வந்தாருன்னா தள்ளுபடி ஆகக் கூட வாய்ப்பிருக்கு.”

சிறிது யோசனைக்கு பின் தொடர்ந்தார்.

“சரி. விவசாயக் கடன் குடுக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன். இரண்டு லட்சம்  சாங்க்ஷன் பண்ணுறேன்…”

“ஒன்றரை லட்சம் போதுமே சார்.”

“முழுசா கேளுப்பா. நீ வாங்கப் போறது  விவசாயக் கடன். அத ரூல்ஸ் படி வேற எதுக்கும் பயன் படுத்தக்கூடாது. ஆனா நீ அம்மா ஆபரேஷனுக்கு செலவு செய்ய போற. தப்பில்ல. நான் உன் இடத்துல இருந்தாலும் அப்படித்  தான் பண்ணுவேன். ஆனா டிபார்ட்மென்ட்ல இருந்து ஃபீல்ட் இன்ஸ்பெக்ஷன் வருவாங்க. அதனால எனக்குத் தான் பிரச்சனை. அந்த பிரச்சனைலாம் நான் பாத்துக்குறேன். இரண்டு லட்சத்துல ஒன்றரை லட்சம் அம்மாவோட ஆஸ்பித்திரி செலவுக்கு வெச்சுக்கோ. மீதி ஐம்பதாயிரத்துக்கு உரம் வாங்கிக்கோ. அடுத்த ஒரு இரண்டு வருஷத்துக்கு உரமும் ஆச்சு. ஆஸ்பத்திரிக்குக் காசும் ஆச்சு. என்ன சொல்ற?”

“ஆனா சார் ஐம்பதாயிரத்துக்கு உரம் வாங்கி நான் என்ன பண்ணப் போறேன்?”

“இந்த வருஷம் மழை நல்லா இருக்கும்னு சொல்றாங்க. எப்படியும் உரம் தேவைப் படும். அதுமட்டுமில்லாம எப்படியும் இந்தக் கடன்லாம் தள்ளுபடி ஆகிடும். அப்புறம் என்ன?”

இவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவர் சொல்வதும் உண்மை தான். தேர்தலுக்குப் பின் இந்தக் கடனெல்லாம் உறுதியாகத் தள்ளுபடி ஆகிவிடும். உரத்தேவைக்கு உரமும் ஆயிற்று. உரம் அதிகமாக இருந்தால் வேறு யாரிடமாவது விற்றுக்கொள்ளலாம். வந்த வரைக்கும் லாபம் தானே!

“சரிங்க சார். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.”

கடனுக்குத் தேவையான அலுவல் வேலைகள் எல்லாவற்றையும் முடித்து வெளியில் வரும் போது மழைத்தூறல் ஆரம்பித்திருந்தது.

*****

அன்றைக்கு அவன் யூகித்திருந்ததில் பல விஷயங்கள் பொய்த்திருந்தன. அன்றிலிருந்து இன்று வரை ஒரு சொட்டு மழை கூடப் பெய்யவில்லை. இதனால் அன்று வாங்கி வந்த உரத்திற்கு வேலையே இல்லாமல் போயிற்று. அந்த உரத்தை விற்கவும் முற்பட்டான். ஆனால் முடியவில்லை. மழையில்லாததனால் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தில் விவசாயமே நடைபெறவில்லை. இதில் யார் வந்து உரம் வாங்குவர்?

எதிர்க்கட்சியும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதனால் இரண்டு லட்சம் கடனை வட்டியோடு திருப்பித் தர வேண்டும். முதலிரண்டு மாதங்கள் தவணையைத் தவறாமல் கட்டி வந்தான். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகக் கட்ட முடியவில்லை. அதனால் இன்று வீடு தேடி வந்துவிட்டார்கள்.

என்ன செய்யப் போகிறோம் என்று ஒரே கவலையாக இருந்தது. எப்படியாவது பணத்தைப் புரட்ட வேண்டும். பேசாமல் செட்டியாரிடம் போய் கேட்கலாமா? அடகு வைக்க எதுவும் இல்லாமல் அவர் மட்டும் எப்படி காசு தருவார்? கேட்டுத் தான் பார்ப்போமே. ஆனால் இப்போது போகக் கூடாது. இருட்டிய பின் கடை அடைக்கும் நேரம் பார்த்துப் போக வேண்டும். அப்போதுதான் சுற்றி யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த ஊரில் இருக்கிற ஒரே மளிகைக்கடை செட்டியாருக்குச் சொந்தமானது. மளிகைக்கடையின் பின்புறம் அவரது வீடு. மளிகைக் கடை வியாபாரத்தைத் தவிர ஊரில் வட்டிக்குக் கடன் கொடுத்தும் சம்பாதித்து வந்தார்.

இவன் அவரிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னபோது அவர் ஒரே வார்த்தையில் முடியாதென்று சொல்லிவிட்டார்.

“எதுவும் அடகு வைக்காம எப்படிய்யா உனக்குக் காசு குடுக்க முடியும்? நிலத்துப் பத்திரத்த வேற ஸொசைட்டியில் போய் அடகு வெச்சிருக்க.”

“நீங்க மனசு வெச்சிங்கன்னா முடியுங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கலேன்.”

“சொல்றதுக்கு நல்லாத்தான்யா இருக்கு. கொஞ்ச நஞ்ச காசா கேக்குற? மூணு லட்ச ரூவா! எப்படித் திருப்பித் தருவ? அசல விடுய்யா. மாசாமாசம் வட்டி கட்ட முடியுமா உன்னால? ஒரு வெள்ளாமையும் இல்லாம எப்படித் திருப்பித் தருவ?”

“சின்ன வயசுல இருந்து என்ன உங்களுக்குத் தெரியும். இது வரைக்கும் எங்க குடும்பம் யாரையும் ஏமாத்துனது இல்ல. எங்கப்பா உங்களோட பாலிய சினேகிதர் கூட. அந்த நம்பிக்கையில குடுக்கக் கூடாதா?”

செட்டியார் எந்த பதிலுமின்றி அமைதியானார். கீழே பார்த்துக்கொண்டே அங்கும் இங்கும் நடந்தார்.

“சரி. இப்படி வேணும்னா பண்ணுவோம். இப்பல்லாம் விவசாயத்துல எங்க லாபம் இருக்கு? மழையே பெய்ய மாட்டேங்குது. அதனால வீடு இருக்குற நிலம் போக மத்த நிலத்த என் கிட்ட வித்துடு. ஐந்து லட்ச ரூவா தரேன். அத வெச்சு ஸொசைட்டி கடனையும் கட்டிடு. அம்மாவோட ஆஸ்பித்திரிச் செலவையும் பாத்துக்கோ. இத விட்டா உனக்கு வேற வழி இல்ல.”

இதைக் கேட்டதும் இவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“என்ன விளையாடுறீங்களா? காசுப் பிரச்சினை, உதவினு வந்து நின்னா இதான் சாக்குன்னு நிலத்த அடிமாட்டு விலைக்கு வாங்கப் பாக்குறீங்களா? என்னப்பாத்தா என்ன இளிச்சவாயனாத் தெரியுதா? கஷ்டம்னு வந்து நின்னா அடிமடியில கை வைக்கப் பாக்குறீங்களா? பணமும் வேணாம், ஒரு மயிரும் வேணாம்” என்று சொல்லிவிட்டு திரும்பிக்கூடப் பார்க்காமல் விறுவிறுவென்று கடையை விட்டுக் கிளம்பினான்.

எதற்காக இவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றின் மேலும் கோபமாக வந்தது அவனுக்கு. அம்மாவிற்கு வந்த நோய் மீது கோபம். இந்த வருடம் வராமல் பொய்த்துப்போன மழையின் மீது கோபம். கடன் தள்ளுபடி ஆகுமென நம்பி ஸொசைட்டியில் கடன் வாங்கி ஏமாந்து போன தன் மீது கோபம். எல்லாவற்றிற்கும் மேல் இதுதான் வாய்ப்பென்று நிலத்தை அடிமாட்டு விலைக்கு அபகரிக்கப் பார்க்கும் செட்டியார் மீது கோபம்.

என்ன தைரியமிருந்தால் இப்படி நிலத்தை வாங்கப் பார்ப்பார்? நிலத்தை விற்றுவிட்டு என்ன செய்வது? திரும்ப கூலி வேலைக்குச் செல்ல வேண்டியது தான்.

அதற்குள் அவன் தெரு முனையை அடைந்திருந்தான். தெரு முழுவதும் தெருவிளக்குகள் எரிந்தாலும் தெரு முனையில் மட்டும் கொஞ்சம் இருட்டாக இருந்தது. ஓரமாக ஒரு குத்துக்கல்லில் போய் உட்கார்ந்தான்.

செட்டியார் சொல்வதும் உண்மைதானே? அடகு வைக்க எதுவும் இல்லாமல் யார் தான் கடன் கொடுப்பர்? இப்போது காசுக்கு என்ன செய்வது? எல்லாரிடமும் கேட்டுப் பார்த்தாயிற்று. இதைவிட்டால் வேறு வழி இல்லையே!

அம்மாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். யோசித்துப் பார்த்தால் அதற்கு நிலத்தை விற்பதைத் தவிர வேறு வழி இல்லையே! கூலி வேலை செய்து பிழைப்பது ஒன்றும் புதிதன்று. அம்மா கேட்டால் பதறிப் போவாள். உயிர் போனாலும் நிலம் போகக் கூடாதென்று ஒற்றைக் காலில் நிற்பாள். அப்பா வியர்வை சிந்தி உழைத்து வாங்கிய நிலம் என்று கண்ணீர் விடுவாள்.

இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தான் என்று தெரியவில்லை.

இவன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி தெருவிளக்கொன்று மினுக்மினுக்கென்று மின்னிக்கொண்டிருந்தது.

பெருமூச்சு விட்டபடி எழுந்து நடந்தான் செட்டியார் வீட்டுக்கு.

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

©2025 Dinesh Sambasivam's Dinoverse

All we have is now

Let's connect?